நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு நாளை காலை தூக்கு!

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் த் திகதி டெல்லி திகார் சிறையில் தூக்கில வேண்டும் என்று கடந்த 17ம் திகதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தார். அத்துடன் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்மூலம், நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நாளை காலை தூக்கிலிடப் படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!