கொரானா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3001 ஆக உயர்வு!

உலகம் முழுவதும் கொரானா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், இத்தாலியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களை மீட்கும் படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவிவிட்டது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கையுடன் இணைந்து கொரானாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து ஒன்றாக உள்ளது. நேற்று ஒரே நாளில் ஈரானில் 11 பேர் உள்பட 24 பேர் இந்த கொடிய நோய்க்கு பலியாகி உள்ளனர். 67 நாடுகளில் பரவியுள்ள கொரானாவுக்கு இதுவரை 88 ஆயிரத்து 375 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில், 7 ஆயிரத்து 608 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக போதிய ஆலோசனைகள் வழங்கவும் சீனா முன்வந்துள்ளது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றையும் ஈரான் நாட்டிற்கு சீனா அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் ஈரானில் உள்ள மருத்துவர்களுக்கு கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது, உயிரிழப்பை தடுப்பது எவ்வாறு என பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்களும் ஈரானில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு திரும்ப அழைத்து வரத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு மத்திய அரசின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.

இதேபோல் ஈரானில் சிக்கியுள்ள கேரள மீனவர்களை மீட்டு வரவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஈரானில் தவித்துவரும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு அடுத்தபடியாக கொரானாவால் இத்தாலியில் 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் கொரானாவுக்கு ஆயிரத்து 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக நோய்த் தொற்று பரவி வருவதால் மிலன் நகரில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான லா ஸ்காலா ஓபரா ஹவுஸ் வரும் 8ம் தேதிவரை மூடப்படுவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அன்றைய தேதிவரை கலாச்சார நிகழ்வுகள், பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் பல்வேறு நகரங்களுக்கு வெளியாட்கள் செல்லவும், அங்கிருப்பவர்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழக நகரமான பாவியாவில் சுமார் 85 இந்திய மாணவர்கள் ஒரு வாரமாக சிக்கித் தவிக்கின்றனர். தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் அவசரச் செய்தி அனுப்பியுள்ளனர். இதேபோல் அமெரிக்கர்கள் இத்தாலிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனா, தென் கொரியா மற்றும் ஈரானைத் தொடந்து இத்தாலிக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!