நாடாளுமன்றம் கலைப்பு – ஏப்ரல் 25இல் தேர்தல்!

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கையெழுத்துடன் நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவின், கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமையவும், 1981ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழும், தம்மால் எட்டாவது நாடாளுமன்றம் 2020 மார்ச் 02ஆம் நாள் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம், மே 14ஆம் நாள் கூட்டப்படும் என்றும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் எனவும், மார்ச் 12 தொடக்கம் 19 நண்பகல் 12 மணி வரை தெரிவத்தாட்சி அதிகாரிகளால், வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!