சுரேன் ராகவனுக்கு எதிராக சரவணபவன் போர்க்கொடி!

சிறு வலியேனும் அனுபவிக்காத சுரேன் ராகவன், விக்னேஸ்வரன் போன்றோர்கள் தான் களத்தில் சந்தர்ப்பத்தை பாவிக்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் முயற்சித்துள்ளமை குறித்து வெளியாகிய செய்திகள் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

‘அவ்வாறான செய்தியை நான் பத்திரிகை ஒன்றில் பார்த்தேன். தேர்தலில் போட்டியிட ஆசண ஒதுக்கீடு தருமாறு சுரேன் ராகவன் சுமந்திரனை சந்தித்து கேட்டதாக அறிந்தேன்.

அவர் முதலில் சுமந்திரனை சந்தித்துள்ளார். அவர் விட்ட முதல் பிழையானது சுமந்திரனிற்கு இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியாது.

இவ்விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவரிடம் அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் பேசியிருக்க வேண்டும். அந்த விடயத்தில் அவர் தவறிவிட்டார்.

சுமந்திரன் தொடர்பில் வெளித்தோற்றம் ஒன்று உள்ளது. சுமந்திரனிடம் போனால் தான் தமிழரசு கட்சியில் காரியம் ஆகும் என்ற தோற்றப்பாடு உள்ளது.

ஆனால் அது அப்படியல்ல. சுமந்திரனும் ஓர் உறுப்பினர். அவரால் முடிவெடுக்க கூடிய அளவு இல்லை. அவரது கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றமை உண்மை. அவரால் பல விடயங்களை செய்யலாம். ஆனால் கட்சி என்பது கட்டுக்கோப்புடன் பல பேர் சேர்ந்து நிகழ்ச்சி திட்டங்களை செய்கின்ற நிலையே உண்டு.

அவர் எமது அனைத்து கூட்டங்களிற்கும் வருகின்றார். எமக்கு சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக வருகை தரும் வரை அவரை எமக்கு யாரென்றே தெரியாது. யாழ்ப்பாண மக்களுக்கே தெரியாது. ஆளுநராக வந்து அதிகமாக கதைத்திருக்கின்றார். செயல் வடிவமாக எதையும் செய்யவில்லை.

வடக்கு மாகாணசபையின் முதலாவது தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே கூட்டமைப்பு அழைத்து வந்தது. இப்போது சுரேன் ராகவனை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் வெளியாகின்றது.

காலத்திற்கு காலம் வடக்கு மாகாணத்திற்கு இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து அழைத்த வரப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக கூட்டமைப்பு அறிமுகம் செய்கின்றது. உண்மையில் எதற்காக இவ்வாறு செய்கின்றீர்கள். இங்கு ஆளுமை உள்ளவர்கள் இல்லை என்று நினைக்கின்றீர்களா?

சி.வி விக்னேஸ்வரனை கொண்டு வந்தபோது நான் எதிர்த்தேன். எமது பத்திரிகையும் எதிர்த்தது. கனடாவில் இடம்பெற்ற கூட்டத்தில் கேட்டபோதும் தமிழரசு கட்சியின் தலைவரே பொருத்தமானவர் எனவும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது களத்தில் மீண்டும் வந்து சந்தர்ப்பத்தை பாவிக்கின்றார்கள் ஒரு வலியும் அறியாதவர்கள். ராகவனிற்கு இங்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அதேபோன்று தான் விக்னேஸ்வரனிற்கும்.

விக்னேஸ்வரனை கொண்டு வந்து பட்டது போதும் என்று நினைக்கின்றார்கள். ராகவன் விடயத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!