மகளை திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த தொழிலதிபர் தற்கொலை!

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட மிர்யலகுடாவை சேர்ந்த பிரபல தொழிதிபர் மாருதி ராவ் (வயது 55). இவரது மகள் அம்ருதா வர்‌ஷினி, பிரணய் என்ற வாலிபரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். பிரணய் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்களது திருமணத்துக்கு மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் கர்ப்பமடைந்த அம்ருதாவை கடந்த 2018 செப்டம்பர் 14 ஆம் திகதி அங்குள்ள மருத்துவமனைக்கு பிரணய் அழைத்து சென்றார். அங்கு டாக்டரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, அம்ருதாவின் கண் எதிரிலேயே பிரணய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

பிரணய், அம்ருதாவை திருமணம் செய்தது பிடிக்காததால், மாருதி ராவே கூலிப்படையை வைத்து பிரணயை ஆணவக்கொலை செய்தது தெரிய வந்தது. இதற்காக கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை அவர் கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்தில் மாருதி ராவ், அவரது சகோதரர் ஸ்ரவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி ராவ் பிணையில் வெளியே வந்தார்.

அம்ருதா தனது கணவர் வீட்டிலேயே வசித்து வருகிறார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் மாருதி ராவ் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் அருகே கைரதாபாத்தில் உள்ள வர்த்தக சங்க விருந்தினர் மாளிகை ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அவரது டிரைவர் விருந்தினர் மாளிகைக்கு வெளியே காரில் படுத்து உறங்கினார்.

நேற்று காலையில் மாருதி ராவின் மனைவி கிரிஜா, அவருக்கு போன் செய்தார். ஆனால் அவர் எடுக்காததால், டிரைவர் மூலம் அவரது அறையை சோதனையிடக் கூறினார். அதன்படி மாருதி ராவின் அறைக்கு சென்ற டிரைவர், அவரது அறை பூட்டப்பட்டு இருந்ததால் பொலிஸூக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் பொலிஸார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாருதி ராவ் வி‌‌ஷம் குடித்து பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். அதில் தன்னை மன்னிக்குமாறு மனைவிக்கும், தாயுடன் சென்று விடுமாறு அம்ருதாவுக்கும் அவர் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரணய் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாருதி ராவ் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என அவரது சகோதரர் ஸ்ரவன் தெரிவித்தார்.

இதற்கிடையே தனது தந்தை இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்ருதா, தனது கணவரை (பிரணய்) கொலை செய்த வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்தார்.

மகளின் கணவரை ஆணவக்கொலை செய்த தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!