யெஸ் வங்கி பிரச்சினை: வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்!

அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணம் பத்திரமாக இருப்பதாகவும் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு, வாராக் கடன்களின் சுமை அதிகரிப்பு, மும்பையில் கூட்டுறவு வங்கிக்கு ஏற்பட்ட பாதிப்பு, பங்குச் சந்தையில் வீழ்ச்சி, யெஸ் வங்கி பிரச்சினை என அடுத்தடுத்து வங்கிகளின் மீது நம்பிக்கையிழக்கச் செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதனால் வங்கிகளில் தங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகமும் குழப்பமும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தைப் போக்க ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பகுதியில், ஊடகங்கள் வாயிலாக வங்கிகளின் முதலீடு பாதுகாப்பானதா என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எந்த ஒரு வங்கியிலும் செய்த எந்த ஒரு முதலீடு குறித்தும் அச்சப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் எந்த ஒரு பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை என்று உறுதியளிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வங்கிகள் மிக உறுதியான மூலதனத்தை கொண்டிருப்பதாகவும், எனவே முதலீட்டாளர்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வங்கியின் பாதுகாப்பு தன்மையை, C.R.A.R எனப்படும், மூலதனம் – இடர் சொத்து விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இந்திய வங்கிகளின் C.R.A.R விகிதம் 14.3 சதவீதமாக உள்ளதாகவும், இது சர்வதேச அளவை விட 80 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை விட 60 மடங்கு கூடுதல் மூலதனத்தை இந்திய வங்கிகள் கொண்டிருப்பதாகவும் மத்திய அரசின் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!