பெல்ஜியத்தில் கொரோனாவை பரப்பும் விதமாக நடந்துகொண்ட நபர் கைது!

உலகமே கொரோனா பயத்தில் கிடக்கும் நேரத்தில், ரயில் பயணி செய்த ஒரு செயலால், ரயிலே நிறுத்தப்பட்டு கிருமிநீக்கம் செய்யப்படவேண்டியதாயிற்று. பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்சில் உள்ள சுரங்க ரயில் ஒன்றில் பயணம் செய்த ஒருவர் செய்யும் மோசமான செயலை படம் பிடித்த ஒருவர், அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், மாஸ்க் அணிந்த ஒருவர், தன் மாஸ்கை அகற்றி தன் கையில் எச்சிலைத் தொட்டு ரயில் கம்பம் ஒன்றில் தடவுவதைக் காணமுடிகிறது. அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை ட்வீட் ஒன்றை வெளியிட்டது.

அத்துடன், அந்த ரயில் கிருமிநீக்கம் செய்யப்படுவதற்காக உடனடியாக அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த செயலை வீடியோ எடுத்து தங்களுக்கு தகவல் தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்ட ரயில்வே துறை, தங்கள் ரயில்கள் தினமும் சுத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்த நபரின் செயல் அருவருப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!