ராஜீவ் கொலை வழக்கு: விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த ஆட்கொண்டர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11-ஆம் திகதி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று சிறையில் இருக்கும் எழுவரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு பிறகு நளினி சட்டப்பூர்வக் காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தியதாலும் இவர்களின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ஆம் திகதி முடிந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையில் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் முடிவெடுக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என தமிழக அரசு கூறியிருந்த நிலையில் தற்பொழுது நளினியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!