தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு ‘ஸ்டிக்கர்’!

கொரோனா தொற்று அபாயத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாழும் வீடுகளை அடையாளங் காண்பதற்கான அறிவித்தல்களை நேற்று முதல் ஒட்டி வருவதாக சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு எவருக்கும் செல்ல முடியாது. தனிமைப்படுத்தியோர் வெளியில் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மீறினால் பிடிவிறாந்தின்றி கைது செய்ய முடியும். குற்றமிழைத்தமை உறுதி செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 1000 ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை தண்ட பணமும் விதிக்கப்படும். இந்த தவறுகளுக்கு ஒத்தாசை வழங்குவோரும் குற்றவாளிகளாகவே கணிக்கப்படுவர். இவர்களுக்கு எதிராகவும் இந்த தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோன தொற்றிய நாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் இடையில் நாடு திரும்பியவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான 880 பேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறானவர்கள் தங்கியுள்ள வீடுகளை அடையாளங்காண விசேட அறிவித்தல்கள் அந்த வீடுகளில் ஒட்டப்படும். அதில் நோய் பரவாமல் தடுக்கும் வழிவகைகளும் மீறினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்றியவர்களுடன் பழகியவர்களுடன் பழகியிருந்தாலும் சுயமாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!