மே நடுப்பகுதியில் பொதுத் தேர்தலுக்கு திட்டம்!

மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அரசுக்கு மக்களாணை கிடைக்கப்பெறவில்லை. ஜனாதிபதி மாத்திரமே, மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முடிந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளது.

பல விடயங்களைச் செயற்படுத்த இடைக்கால அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் பல தடைகள் ஏற்பட்டன.இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறித்தொதுக்கினார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது. தற்போது நாடு பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலமான அரசு தோற்றம் பெற்றால் மாத்திரமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியும். தற்போதைய நிலைமை சீர் செய்யப்பட்டதன் பின்னர் மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!