மோடிக்கு கொலை மிரட்டல் திசை திருப்பும் முயற்சி- காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “அல்கார் பரி‌ஷத்” என்ற அமைப்பின் மாநாடு நடந்தது.

அப்போது பீமா- கோரே கான் பகுதிகளில் திடீர் கலவரம் ஏற்பட்டது. புனே பொலிஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மும்பை, டில்லி, நாக்பூரிலிருந்து புனேக்கு வந்திருந்த 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் 5 பேருக்கும் நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். நக்சலைட்டுகள் தூண்டுதலின்பேரில் இவர்கள் 5 வரும் பீமா- கோரே கான் பகுதியில் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த ஐவர்களின் வீடுகளிலும் நேற்று முன்தினம் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள். டில்லியிலுள்ள ரோனா வில்சன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது சில கடிதங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன குறித்த கடிதங்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுதியது என்று கூறப்படுகிறது.

“ஆர்” என்று கையெழுத்திட்டு பிரகாஷ் என்பவருக்கு அந்த கடிதம் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் பிரதமர் மோடியை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்ற பாணியில் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, “மோடியை கொலை செய்வதற்காக எம் -4 ரக துப்பாக்கிகளை வாங்கவும், 4 இலட்சம் குண்டுகளை வாங்கவும் ரூ. 8 கோடி தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் வீதி பயணத்தை குறி வைத்து தாக்குதலை நடத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில்,

“மோடியின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,

“பா.ஜ.க.வுக்கு எதிராக மாவோயிஸ்டு தீவிரவாதிகளை சில கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இது ஆபத்தில் முடியும் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் புனே நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பொலிஸார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டி மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதத்தையும் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பேசிய அரசு சட்டத்தரணி உஜ்வாலா பவார், “கைதான 5 பேருக்கும் பிணை வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு 5 பேருக்கும் மாவோயிஸ்டு அமைப்புடன் எத்தகைய வகைகளில் தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் நீதிமன்றத்தில் விளக்கமாக கூறினார்.

இதற்கு குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தோசீப் ஷேக் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

“மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அது போலியானது. அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய்நிருபம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போதும் அவரைக் கொல்ல சதி சென்று தகவல் வெளியானது. இப்போதும் அதே பாணியில் கடிதம் வெளியிட்டுள்ளனர். இது மோடி தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள, தற்போதைய பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறி அனுதாபம் தேட முயற்சி செய்கிறார். அவருக்கு செல்வாக்கு சரியும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றை செய்வார்கள். தற்போதும் பா.ஜ.க.வினர் அத்தகைய கதைகளை உலவ விட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடவை மாவோயிஸ்டுகள் சதி என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கடித வார்த்தைகளில் சந்தேகம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!