கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கும் வைத்திய அதிகாரியை நீக்க நடவடிக்கை!

கொரோனொ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால், கொரோனோ அபாயம் நீங்கும் வரையில், அவரைப் பணியில் இருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார்.

”பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், குறித்த வைத்திய அத்தியட்சகர், தங்களுடன் சேர்ந்துச் செயலாற்றுவதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக, தமக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறித்த வைத்திய அத்தியட்சகர், நோயாளிகள் உள்ளே வருகின்ற போது, அவர்களைப் பகுத்தாய்ந்து, பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தனக்கு கஷ்டம் என்று கூறுகிறார். அதனால் அங்கு வருகின்ற நோயாளிகளைச் சரியான முறையில் பராமரிப்பதற்கு வைத்தியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

குறிப்பாக, அங்குள்ள வைத்தியர்கள், குழுவொன்றை அமைத்து அதனூடாகச் செயற்படுவதற்கும், அவ்வைத்தியர் மறுப்பு தெரிவிக்கிறார்., பல நிபந்தனைகளை விதிக்கிறார்.

இந்த அத்தியட்சகர், இதற்கு முன்பு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போதும், அவருக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பல்வேறுபட்ட பிரச்சினைகளை வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தியிருந்தார்.

ஆனாலும், அவருக்கு எதிராக இதுவரையில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை. இப்படியான அத்தியட்சகருடன் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என அங்குள்ள வைத்தியர்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அவரை தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கி, கொரோனொ நீங்கும் வரையில் வேறொரு சிறந்த வைத்திய அத்தியட்சகரை பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!