கிழக்கிலும் புகுந்தது கொரோனா!

அம்பாறை மாவட்டத்தில் முதல் முறையாக, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர்ி அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்டுள்ளார் என்று கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் கு.சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று 19ஆம் வட்டாரம் காசிம் வீதியில் உள்ள வீட்டிலேயே இவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 16ஆம் திகதி கட்டாரில் இருந்து குறித்த நபர் உட்பட ஏழு பேர் அக்கரைப்பற்றுக்கு வந்துள்ளனர். குறித்த ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாள்கள் பூர்த்தியானதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர்களுடன் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு சோதனையின் பின்னர் கொரோனா தொற்று உள்ளது இனங்காணப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏழு பேருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய ஆறு பேருக்கும் தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தொற்றுக்குள்ளான நபர் சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த நபரின் குடும்பத்தினர், அவரின் வான் சாரதி மற்றும் அவருடன் நெருங்கி பழகிய 09 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!