கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 23 பொலிஸாருக்கு தொற்று உறுதி!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 12 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 515 பேர் சிக்கிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 3 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் பரவியவர்களில் 300 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், அம்மாநிலத்தில் கொரோனாவுகு இதுவரை 194 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு அவ்வப்போது இடையூறு அளிக்கும் விதமாக மக்கள் ஊரடங்கை கடைபிடிக்காமல் உத்தரவை மீறி வருகின்றனர். இவ்வாறு உத்தரவை மீறும் மக்களுக்கு போலீசார் தகுந்த தண்டனை வழங்கி வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் பரவியவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவத்துறையினருக்கும் போலீசார் பாதுகாப்பு உதவிகளை செய்துவருகின்றனர். இந்த நடவடிக்கைகளின்போது கொரோனா நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக சட்டம் ஒழுங்கு பணியை மேற்கொண்டுவரும் போலீசார் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 7 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 16 போலீஸ் காவலர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த போது வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போலீசாருக்கும் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவிய 23 போலீசார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!