யாழ்ப்பாணத்தில் 50 பேருக்கு சோதனை! – எவருக்கும் தொற்று இல்லை

யாழ்ப்பாணத்தில் நேற்று 50 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என கணடறியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்- அரியாலையில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளில், அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 30 பேரிடமும், கிளிநொச்சியைச் சேர்ந்த 11 பேரிடமும், மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, இந்த 41 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து திரும்பி வீடுகளில் சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்த 5 பேரிடமும், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவரிடமும், வவுனியா வைத்தியசாலையிலிருந்து ஒருவரிடமும் என 9 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த 9 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!