உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்புக்கூற வேண்டும்!

தேர்தலை அறிவித்தால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு, தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

“ ஏப்ரல் 20, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள். மக்களின் உடல்நிலை சார்ந்து தேர்தலுக்கு செல்லலாமா என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் நாள்.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவுகிறது என்பதை அரசாங்க புள்ளிவிபரங்கள் கூட உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இது அதிகாரபூர்வமற்ற வகையிலான புள்ளவிபரங்கள் என சிலர் கூறுகின்றனர். இருப்பினும், சடலங்கள் மேல் நின்று தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஒரு நேரத்தில், தேர்தலின் போது கொரோனா வைரஸால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். எனவே, தேர்தலை நடத்தக்கூடிய இந்த போராட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் எழுத்துபூர்வமாக இந்த நாட்டிற்கு உறுதியளிக்க வேண்டும்.

அதன்படி, சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க, கொரோனா செயலணி தலைவர் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் பிற உலக சுகாதார அமைப்புகள் என்பன எழுத்து மூல உறுதி மொழியை அளிக்க வேண்டும்.

அவர்களின் ஆலோசனையின் பேரில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தக்கூடிய திகதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் சார்பாக அவசர முடிவுகளை எடுக்காமல், அன்றாட அடிப்படையில் தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும்.

இந்த அரசாங்கத்தின் கால அட்டவணைக்கு ஏற்ப அவசரமாக திகதியை நிர்ணயிக்காமல்,வாக்காளர்கள், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அனைத்து அரசு அதிகாரிகளைின் வாழ்வை கவனத்தில் எடுத்து ஒரு திகதியை தேர்தல் ஆணையம் அமைக்க வேண்டும்.

இல்லையெனில், தாங்கமுடியாத இறப்பு, தாங்க முடியாத தொற்று, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து, மற்றும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். இதுவரை செய்த தியாகங்களை வீணாக்காத பொறுப்பை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், ”என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!