உலக நாடுகளின் மாபெரும் சந்தேகத்துக்கு பதிலளித்தது சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுகூடம்!

உலககையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறித்து சீனாவை பல்வேறு நாடுகள் விமர்சித்து வருவதோடு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என வுஹானில் உள்ள சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் தோன்றியதாகக் கூறப்பட்டுவந்தது.

எனினும் மற்றொரு பக்கத்தில் இந்த வைரஸ் வுஹான் நகரில் உள்ள வைரலொஜி இன்ஸ்ரிரியூட் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஏற்பட்ட தவறினால் மனிதர்களுக்குப் பரவியுள்ளது என அமெரிக்காவின் Fox News தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும், நடந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாது அந்த ஆய்வுகூடத்துக்கு அளித்துவந்த நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த ஆய்வுகூடத்தின் இயக்குநர் யுவான் ஜிமிங், சீன அரச ஊடகமான சி.ஜி.டி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

“எங்கள் நிறுவனத்தில் என்ன வகையான ஆராய்ச்சி நடக்கிறது, நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். வைரஸ் எங்களிடம் இருந்து வருவதற்கு வழி கிடையாது.

எங்களிடம் கடுமையான ஒழுங்குமுறை விதிகள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்கான நடத்தை நெறிமுறைகளும் இருக்கின்றன. எனவே நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்கள் வைரலொஜி இன்ஸ்ரிரியூட்டும், ஆய்வுக்கூடமும் வுஹானில் இருப்பதால் மக்கள் உதவ முடியாது. ஆனால் தொடர்பு கொள்ள முடியும்.

எங்கள் ஆய்வு கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு, அங்கிருந்துதான் வெளியே வந்துவிட்டதாக அமெரிக்கா கூறும் முறைப்பாடுகள் துரதிர்ஷ்டவசமானது. சிலர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலானது.

இதன் நோக்கங்களில் ஒன்று, மக்களைக் குழப்புவதும் எங்கள் தொற்று தடுப்பு மற்றும் அறிவியல் நடவடிக்கைகளில் தலையிடுவதும் ஆகும். அவர்கள் நோக்கம் ஒருவிதத்தில் நிறைவேறியிருக்கலாம்.

ஆனால், ஒரு விஞ்ஞானி என்ற முறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் என்ற விதத்திலும் ஆய்வு கூடத்தில் செயற்கையாக வைரசை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று எனக்குத் தெரியும்.

வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது. கொரோனா வைரஸ் செயற்கையானது என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் கிடையாது. சில விஞ்ஞானிகள் ஒரு வைரசைத் தொகுக்க அசாதாரணமான நுண்ணறிவும், மிகப்பெரிய உழைப்பும் தேவை என்று நம்புகிறார்கள். எனவே இது போன்ற ஒரு வைரசை உருவாக்குகிற திறன், தற்போது மனிதர்களிடம் உள்ளது என்று நாங்கள் நம்பவில்லை.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே, அந்த வைரசின் மரபணு வரிசையையும், விலங்கு மாதிரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியையும் உலக சுகாதார நிறுவனத்துடனும், உணவு மற்றும் விவசாய நிறுவனத்துடனும் பகிர்ந்து கொண்டோம்” என்று குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!