கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்: கேவலமான செயலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்யவிடாமல் ஆம்புலன்ஸ், மற்றும் ஊழியர்களை மக்கள் அடித்து உதைத்துள்ளனர். சென்னை, நெல்சன்மாணிக்கம் சாலையை சேர்ந்த 55 வயது மருத்துவர் ஒருவர்,தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். அவர், பிரபல நரம்பியல் நிபுணராவார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதை அடுத்து அவரது சடலம் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு மருத்துவரின் உடல் இரவு 11மணியளவில், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அதற்முன் கல்லறை தோண்டும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இது குறித்த தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள இடத்துக்கு வந்து இங்கு கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதே சமயத்தில் மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள், மருத்துவரின் சடலத்தை அங்கு அடக்கம் செய்ய சம்மதிக்கவில்லை.

அதனால், அங்கிருந்து மருத்துவரின் மற்றொரு மயானத்துக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது திடீரென ஆம்புலன்ஸை பொதுமக்களில் சிலர் அடித்து உடைத்தனர். அதனால் ஆம்புலன்ஸின் கண்ணாடிகள் உடைந்தன. ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பொலிசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர். பின்னர் மருத்துவரின் சடலம் அதிகாலை ஒரு மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. சம்பவத்திற்கு காரணமான 20பேர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “கொரோனா தொற்றால் இறந்த மருத்துவர், பிரபலமான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். இவருக்குச் சொந்தமாக மருத்துவமனை உள்ளதால் அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் தான் சடலம் கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவரின் மகளும் மருத்துவராக உள்ளார். அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றனர். இதுகுறித்து அந்த மருத்துவரின் நண்பர் பாக்கியராஜ் என்பவர், “மருத்துவர் இவ்வாறு நடத்தப்பட்டது முறையற்றது. அவரது உடலை அடக்கம் செய்ய இரவு முழுக்க உடலுடன் அலைய வேண்டி சூழல் ஏற்பட்டது. ஒரு சிறந்த மருத்துவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டது”.என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!