குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்ட, நிதியளித்த, உதவிகளை வழங்கிய அனைத்து குற்றவாளிகளும், விரைவில் வெளிப்படுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த கோர நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இலங்கையில், எந்தவொரு குழுவிற்கும் தனிநபர்களுக்கும் தீவிரவாதத்தை பரப்புவதற்கு இடமில்லை.

குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அனைவரும், அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் தொடர்புகள், இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் .

இத்தகைய பயங்கரவாத செயல்களை ஆரம்ப கட்டங்களில் அடையாளம் காண அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

தீவிரவாதத்தைத் தடுப்பதில் புலனாய்வுத்துறை மற்றும் பொதுமக்கள் ஆதரவு முக்கியம் , ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும், ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு புலனாய்வு கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலமும், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலமும் இறந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினர் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!