பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- விஜயகலா கோரிக்கை!

யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலைமை மேலும் தொடர அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு செயலணி செயற்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் கொழும்பு பகுதியில் இருந்து சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி உரிய பாஸ் அனுமதியினை பெறாது கொரோனா தொற்று அதிகமுள்ள கொழும்பு மாவட்டத்திலிருந்து ஏழு பேர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அனுமதியின்றி பயணித்து பாதுகாப்பு தரப்பினரால் இனங்காணப்பட்டு சட்ட நடவடிக்கையின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலை இனியும் தொடர்வதற்கு யாழ்மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி இடமளிக்க கூடாது.

எனவே முதலில் பொது மக்களை விழிப்பூட்டும் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் அத்தோடு வெளி மாவட்டத்திலிருந்து குறிப்பாக கொரோனா தொற்று அதிகமுள்ள தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்பில் அதிகாரிகள் கூடிய அக்கறை செலுத்தி அவர்களை உரிய சுகாதார நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வாரம் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்படவில்லை இந்த நிலைமை மேலும் தொடர்வதற்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!