கொரோனாவின் கோரத்தாண்டவம் – கைலாசாவுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது!

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கால் முடங்கி உள்ள நிலையில் ஒரே ஒரு நாட்டில் தான் கொண்டாட்டமாக உள்ளது. அது “கைலாசா நாடு”, அந்நாட்டின் அதிபர் சாமியார் நித்யானந்தா. நடிகை ரஞ்சிதாவுடனான நெருக்கமான காட்சிகள் வெளியானதில் இருந்து உலகம் முழுவதும் பிரபலமான இவர் மீதும், இவரது ஆசிரமங்கள் மீதும் அடுத்தடுத்து பண மோசடி, பாலியல் புகார் என ஏராளமான புகார்கள் குவிந்தன. எதைப்பற்றியும் கவலைப்படாத நித்யானந்தா உலகின் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை விரிவுபடுத்தினார். இந்தநிலையில் தான் பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் மகள்களை குஜராத்தில் உள்ள ஆசிரமத்துக்கு கடத்தி சென்று விட்டதாக புதிய புகார் எழுந்தது. அதன்பேரில் விசாரணைக்காக நித்யானந்தா ஆசிரமத்துக்கு போலீசார் சென்ற போது அவர் கடந்த வருடமே பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது.

இதற்கிடையே, கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா தொடர்ந்து ஆஜராகாததால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை பெங்களூர் கோர்ட்டு ரத்து செய்து பிடிவாரண்டு பிறப்பத்தது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் சர்வதேச போலீசார் (இன்டர்போல்) உதவியுடன் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசாரின் தேடுதல் வேட்டை ஒருபுறம் இருந்தாலும் நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தான் அமைக்கப்போகும் அந்த நாட்டிற்கென கொடியை அறிமுகப்படுத்தி, கொள்கைகள் வகுத்த அவர் “கைலாசா” நாட்டில் குடியேற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார். அடுத்த இரண்டு நாட்களில் 40 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அந்த அளவுக்கு இளைஞர்களின் கனவு தேசமாக கைலாச நாடு மாறியது. மேலும், போலீசாரை கிண்டல் செய்தும், சினிமா கதாநாயகர்கள் போல பஞ்ச் டயலாக் பேசியும் அவர் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகின.

இவற்றையெல்லாம் பார்த்த கோர்ட்டு போலீசாரின் தேடுதல் வேட்டை குறித்து கேள்வி எழுப்பவே, வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. இதனால் சில நாட்களாக வீடியோக்கள் வெளியிடுவதை நிறுத்தி இருந்த நித்யானந்தா தற்போது மீண்டும் புதிது, புதிதாக வீடியோக்களை வெளியிட்டுள்ளார். எடை குறைந்து, ஸ்லிம்மாக மாறி உள்ள அவர் கதாநாயகன் போல சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், நரைத்த வெள்ளை முடி கலந்த தோற்றத்தில் அசத்தலாக காட்சி அளிக்கிறார். நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்திராட்ச மாலை, கையில் சூலாயுதம் தாங்கி போஸ் கொடுக்கும் அவரின் பின்னால் அவரது புகழ் பரப்பும் வகையிலான பாடல்கள் ஒலிக்கிறது.

இவர் தான் இப்படி என்றால் இவரது சீடர்கள் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்கள் செய்து வெளியிட்டுள்ளனர். சாமிஜி கொடுத்த லட்டை சாப்பிடும் பெண் சீடர்கள் ‘கைலாசாவுக்கு நோ லாக்டவுன்” என்று தலைப்பிட்டு வித விதமான வீடியோககளை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். அதிலும் காதல் மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘பெண்கள் விரும்பும் பேரழகன் இவனே காதல் மன்னன்” என்ற வரிகளுக்கு பெண் சீடர்களின் ஆடிய டிக் டாக் வீடியோ லைக்குகளை வாங்கி குவிக்கிறது. இது மட்டு மல்லாமல், பம்பாய் படத்தில் இடம் பெற்ற கண்ணாளனே பாடல், அருணாசலம் படத்தில் இடம் பெற்ற சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் என பல்வேறு

ஹிட் பாடல்களுக்கு டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வரும் பெண் சீடர்கள், தங்களது குருஜியை பாகுபலி ரேஞ்சுக்கு புகழ்ந்து வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன. கவுண்டமணி- சத்யராஜ் காமெடியை வைத்துக் கொண்டு குருஜியை கலாய்த்தும் வீடியோ வெளியிட்டுள்ளனர். உலகமே ஊரடங்கால் சின்னா பின்னமாகி உள்ள நிலையில் இந்த டிக்டாக் வீடியோக்களை பார்க்கும் இளைஞர்களின் ஒரே கேள்வி, எங்கே இருக்கிறது கைலாசா நாடு? என்பது தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!