கொரோனா தாக்கம்: சிவப்பிலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறும் மாவட்டங்கள்!

கொரோனா பாதித்த மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிக்கப்படுகின்றன. 15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 15-க்கு குறைவானவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாவும், நோய் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் கணக்கிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய வண்ணம் உள்ளனர். அவ்வாறு நோய் பாதித்தவர்கள் குறைந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி வருகிறது.

முதல் 14 நாட்கள் யாருக்கும் தொற்று கண்டறியப்படாவிட்டால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கும், அடுத்த 14 நாட்களிலும் நோய் பாதிப்பு இல்லாவிட்டால் ஆரஞ்சில் இருந்து பச்சை மண்டலத்துக்கும் மாவட்டங்கள் மாறும். அதன்படி தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளன.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 6 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது.

கோவையில் மொத்தம் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 133 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த 23-ந் தேதிக்கு பிறகு கோவையில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டம் விரைவில் கொரோனா நோய் இல்லாத மாவட்டமாக அறிவிக்க வாய்ப்புள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கோவை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கும், பின்னர் பச்சை மண்டலத்துக்கும் மாற வாய்ப்பு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 103 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 9 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 5 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து 14 நாட்கள் நோய் தொற்று இல்லை என்றால் திருப்பூர் மாவட்டம் சிவப்பு மண்டத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற வாய்ப்புள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதனால் நீலகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாறுகிறது.

இதற்கிடையே நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அரசு துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு இல்லாத காரணத்தால் தமிழக அரசின் உத்தரவுப்படி வருகிற 4-ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் அனைத்து அலுவலர்களை கொண்டு வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார். 26 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இன்று ஒருவர் வீடு திரும்புகிறார். கடந்த 13 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறுகிறது.

திருச்சியில் மொத்தம் 51 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 47 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இன்னும் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதனால் திருச்சி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு விரைவில் மாறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து 70 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் மரணம் அடைந்தார். 69 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் இல்லாததால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.

தேனி மாவட்டத்தில் 43 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒருவர் மரணம் அடைந்தார். நேற்று வரை 37 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 5 பேர் மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த 14 நாட்களாக புதிய தொற்று எதுவும் இல்லாததால் தேனி மாவட்டம் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 80 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் இறந்தார். 72 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 6 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். கடந்த 12 நாட்களாக புதிய தொற்று எதுவும் இல்லை. இதனால் திண்டுக்கல் மாவட்டம் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற உள்ளது.

கரூர் மாவட்டத்தில் 42 பேர் சிகிக்சை பெற்று வந்தனர். அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கரூர் மாறியிருந்தது. இந்தநிலையில் புதிதாக ஒருவருக்கு நோய் ஏற்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து இந்த மாவட்டம் மீண்டும் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 33 பேர் குணமாகி வீடு திரும்பினர். இன்னும் 6 பேர் ஆஸ்பத்திரியில் உள்ளனர். கடந்த 16 நாட்களாக புதிய நோய் தொற்று யாருக்கும் ஏற்படாமல் இருந்தது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. இந்தநிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய ராணிப்பேட்டை மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!