யாழ். போதனா மருத்துவமனையில் அருங்காட்சியகம் திறப்பு!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியகமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா மருத்துவமனையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது.

1907 இல் இவ் மருத்துவமனைஅரசின் சிவில்(குடிசார்) மருத்துவத் திணைக்களத்தின் கீழ் வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராணுவ மருத்துவத் திணைக்களத்தின் பதிலீட்டுக்குடிசார் மருத்துவத் திணைக்களமாயிருந்தது. பின்னர் யாழ்ப்பாணம் சிவில் மருத்துவமனை (Jaffna Civil Hospital) என மீளப் பெயரிடப்பட்டது.

மருத்துவமனையில் உள்ள நூறு வருடங்கள் பழமையான கட்டடங்களில் ஒன்று தற்போது அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படுகின்றது. மிகவும் உயர்தரமான கட்டடப் பொருள்களைக் கொண்டு அமைப்பு மாறாது இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு 20 – 30 வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த சத்திரசிகிச்சைக் கூட, ஆய்வு கூட உபகரணங்கள் தற்போது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மருத்துவமனை தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!