‘ராஜிதவின் முதலைக்கதையாலே மக்கள் சிலர் மனம் மாறினர்’

“ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்கு தயாராகவிருந்த வடக்கு, கிழக்கு மக்கள், ராஜித சேனாரத்னவின் முதலைக்கதையால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே முடிவை மாற்றினர்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலக்கு முன்னர் எமது முன்னாள் நண்பர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். தாடி, மீசைகள் எல்லாம் வைக்கப்பட்டு சாட்சிக்காக இருவர் வரழைக்கப்பட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மக்களை கொலைசெய்து, சடலத்தை முதலைக்கு போடுவதைக் கண்டதாக அவர்கள் கூறினர்.

ஜனாதிபதிக்கு வாக்களிக்கவிருந்த மக்களை திசைதிருப்புதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே இது. குறிப்பாக அரச ஊடகங்களிலும் அடிக்கடி இந்த செய்தி வெளியிடப்பட்டது. இதனால் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது.

இப்படியான போலியான – சர்ச்சைக்குரிய அறிவிப்பாலேயே அவருக்கு எதிராக சட்டம் செயற்படுகின்றது. அதற்கு எம்மால் ஒன்றும் செய்யமுடியாது.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!