பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை! – பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்.

அடிப்படைவாத சக்திகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகள் குறித்து மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக ஊடக வலைப்பதிவுகளில், இதுதொடர்பாக பரவுகின்ற செய்தியில் எந்த உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரும், பொலிசாரும், கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், தேசிய பாதுகாப்பு எந்த விதத்திலும், பாதிக்கப்படவில்லை.

அனைத்து புலனாய்வு அமைப்புகளும் தற்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன . உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கக் கூடிய முழுப்பலத்துடன் அவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, தேவையானளவு இராணுவத்தினரையும், பொலிசாரையும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் கடற்படையினருக்கு தொற்று ஏற்பட்ட போதிலும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவமும், பொலிசாரும், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களையும், ஏனைய அனைத்து வகையான தீவிரவாத செயற்பாடுகளையும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!