தள்ளாடும் தமிழகம்: 24 மணி நேரத்தில் 1,384 பேர் கொரோனாவால் பாதிப்பு!

உலகை உலுக்கும் கொரோனாவின் பாதிப்பு, தமிழகத்திலும் வேகம் எடுத்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் குவைத்தில் இருந்து வந்த ஒருவரும், மராட்டிய மாநிலம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 10 பேரும் அடங்குவர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 17 வயது சிறுமி ஒருவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், வேலூரைச் சேர்ந்த 25 வயது மற்றொரு இளம்பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். ஒரே நாளில் உயிரிழந்த 12 பேரில் 7 பேர் பெண்கள் ஆவர்.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 724 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, ஆயிரத்து 18 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 712 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 5- வது நாளாக தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!