கொரோனாவால் உயிரிழந்த தந்தை: அலட்சியப்படுத்திய நிர்வாகம் – பின்னர் நடந்த சம்பவம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையை யாரும் புதைக்க முன்வராததால், அவரே தந்தையின் உடலை புதைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் திணறி வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 309,603-ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,890-ஆக உள்ளது. இந்நிலையில் நொய்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையை புதைக்க யாரும் முன்வராததால் மகனே தந்தையை புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நொய்டாவில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அரசு மருத்துவமனை உட்பட 3 மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கடந்த 8 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

இதில் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே அவர் இறந்தார். இறந்த உடலை அவரது மகனிடம் ஒப்படைத்த மருத்துவ நிர்வாகம் அது குறித்த எந்த விளக்கமும் அளிக்காமல் அவரை அனுப்பியுள்ளது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் அவரே கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி தந்தையை அடக்கம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சரியாக எனது தந்தை இரவு 12.45 மணிக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை 6.30 மணிக்கே அவர் இறந்து விட்டார். ஒருவர் கூட நான் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூற வில்லை. உதவுவதற்கும் யாரும் முன்வரவில்லை. அவர் இறந்து 11 மணி நேரம் கழித்துதான் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

7.30 மணிக்கு என்னிடம் எனது தந்தையின் உடலை கவரில் கட்டி தந்தனர். தன்னந் தனியாக தந்தையின் சடலத்துடன் நின்று கொண்டிருந்தேன். எனது மனைவிதான் எனக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்கித் தந்தார். அதன் பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உதவியுடன் நான் எனது தந்தையை சுடுகாட்டில் சென்று அடக்கம் செய்ததாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!