லடாக் எல்லையில் திடீர் தாக்குதல் நடத்திய சீன படைகள்: தமிழர் உட்பட இந்திய வீரர்கள் மூவர் பலி!

இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று இரவு இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், சீன ராணுவத்துக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மூவரில் ஒரு ராணுவ வீரர் பழனி என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி வயது 40. கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார், கடைசியாக பீரங்கி படைப்பிரிவில் பயிற்றுநராக இருந்தார். இவருக்கு அழகான மனைவியும், பத்து மற்றும் எட்டு வயதில் மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

ராமநாதபுரத்தில் வசிக்கும் பழனியின் குடும்பம், சமீபத்தில் புது வீடு கட்டி குடியேறினர், இதற்கு கூட பழனியால் வர இயலவில்லை. இந்நிலையில் பழனி இறந்த செய்தி கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இவரது உடல் அரசு மரியாதையுடன் நாளை அடக்கம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!