கொரோனா தொற்றுக்கு பலியான கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் அதிபர்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இந்த நாட்டின் அதிபராக 55 வயதான பியர் குருண்சிஸா இருந்து வந்தார். இவர் கடந்த 8-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருசி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிபர் பியர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை எனவும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக மருத்துவ அறிக்கையில் அதிபர் சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் அதிபருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு அதனால் அவர் மரணமடைந்து விட்டதாக பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது.

இந்த தகவலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அதிபர் பியரின் மனைவி டென்னிசுக்கு கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது கென்யாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் மனைவி டென்னிசிடமிருக்கு அதிபர் பியர் குருண்சிஸாவுக்கு கொரோனா பரவி இருக்கலாம் எனவும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்ததால் சுவாசக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

அரசியல் குழப்பத்தை தவிர்க்கவே அதிபர் கொரோனாவால் உயிரிழந்த தகவல் மறைக்கப்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார் என போலியாக அரசு தகவல் வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!