தரிஷா பஸ்ரியனின் லப்டொப்பை கைப்பற்றிய சிஐடி!

கடந்த 9ம் திகதி சிஐடியினர் தனது லப்டொப்பை கைப்பற்றி சென்றுள்ளனர் என்று சண்டே ஒப்சேவர் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார்.

2019 நவம்பரில் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பான குற்றவியல் விசாரணையுடன் பல மாதங்களாக தரிஷா பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தனது கூட்டாளிகள் மற்றும் சகாக்களிடம் தனது மின்னணு சாதனங்கள் குறித்து குறிப்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக தரிஷா கூறினார்.

‘2020 மே 29 மற்றும் 2020 ஜூன் 4ம் தேதிகளில், குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு வந்து, நீதிமன்ற ஆணைப்பத்திரம் இல்லாமல் எனது தனிப்பட்ட லப்டொப்பை கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.

நாங்கள் சட்ட உதவியைப் பெற்றோம், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் லப்டொப்பை ஒப்படைக்க முடியாது என்று என் குடும்பம் சிஐடி அதிகாரிகளுக்கு அறிவித்தது.

இந்நிலையில் 2020ம் ஆண்டு ஜூன் 9ம் திகதி ஐந்து சிஐடி அதிகாரிகள் கொழும்பில் உள்ள எனது வீட்டை சோதனையிட ஆணைப்பத்திரத்துடன் வந்தனர். இதன்போது அதிகாரிகள் எனது படுக்கையறை, மேசை மற்றும் எனது வேலை இடம் உட்பட முழு வீட்டையும் சோதனையிட்டனர். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எனது லப்டொப் கைப்பற்றப்பட்டதுடன் மற்றும் சீல் செய்யப்பட்டது. லப்டொப், பவர் அடப்டர் மற்றும் லப்டொப் பைக்கு சிட்டை வழங்கப்பட்டது. எனது வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

இதே விசாரணையின் போது முன்னொரு சந்தர்ப்பத்தில், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிஐடியினர் எனது அழைப்பு தரவு பதிவுகளைப் பெற்று, அவற்றை ஆராய்ந்து பின்னர் தகவல்களை அம்பலப்படுத்தினர்.

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், எனது தொலைபேசி பதிவுகளை பகிரங்கப்படுத்தியதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இது எனக்கு தொடர்புடையவர்களையும் கடுமையாக ஆபத்தை ஏற்படுத்தியது. எந்தவொரு விசாரணையுடனும் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன், எனது லப்டொப் பகுப்பாய்வில் சிஐடியால் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் கண்டுபிடிக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!