தேர்தல் ஆணைக்குழு சதி செய்கிறது! – குற்றம்சாட்டுகிறார் வீரவன்ச

பொதுத் தேர்தலில் வாக்களிப்பை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சி செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராஜதந்திர தூதுரகங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமையவே, தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

புதிய நாடாளுமன்றம் ஒட்டு மொத்த மக்களினதும் ஆணை பெற்றது அல்ல, ஒரு பகுதி மக்களின் ஆணையை மட்டுமே கொண்டது என்று காண்பிக்கவே, வாக்களிப்பை குறைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்கள் முயற்சிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதை வெளிப்படுத்தும் வகையில், பொதுமக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், கடந்த தேர்தல்களை விட அதிகளவு வாக்களிப்பு இடம்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!