சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!

சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என சிபிசிஐடி பொலிஸார் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் சாத்தான்குளம் சம்பவம்போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக பொலிஸ் துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவித்து வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!