ஜிந்துப்பிட்டியில் நபருக்கு கொரோனா இல்லை! – தனிமைப்படுத்தப்பட்ட 154 பேரும் விடுவிப்பு.

கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, மேற்கொள்ளப்பட்ட ஐந்து பிசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 13, கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றுடைய நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமைஅடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை 154 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து குறித்த நபர் வருகை தந்திருந்ததனால், சுகாதரப் பிரிவினால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்பட்டதாக அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்து கடல் பாதுகாப்பு பணியாளரான குறித்த நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. அதன் விளைவாக உடனடியாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்டதாக அடையாளம் காணப்பட்ட 29 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு வைத்தியசாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட 5 பிசிஆர் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், அவர் கொவிட்-19 நோயாளி அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 154 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு அமைய, அவர்கள் எவரும் கொவிட்-19 நோயால் பாதிக்கப்படதாக அடையாளம் காணப்படவில்லை .

அதன் பிரகாரம், கொவிட்-19 என ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 154 பேரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!