பிரபல கட்சிகளுக்கு இடையில் தற்போது உள்ளகப் போர் ஒன்று இடம்பெற்று வருகின்றது -லக்ஸ்மன் கிரியெல்ல?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன முன்னணிக்கும் இடையில் மறைமுகப் போர் இடம்பெற்று வருகின்றது, அவர்கள் ஆட்சியமைத்தால் சொற்ப நாட்களிலேயே ஆட்சி விழ்ந்துவிடும் என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தற்போது உள்ளகப் போர் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இந்த இரண்டு அணியினரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைத்தால் சொற்ப நாட்களிலேயே பிளவடைந்துவிடுவார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியானவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் தனித்து எமது பயணத்தை முன்னெடுப்போம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அவர்கள் தனித்து தங்களது பிரசாரங்களை முன்னெடுக்கின்றார்கள். நாங்களும் தனித்தே செயற்படுகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் எதிர்காலத்தில் இணைவதா என்பது குறித்து சிந்தித்துக்கூடப் பார்க்கவில்லை.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அரசாங்கம் அவசரமாக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையிலேயே இன்று விமானப்படைக்கு பயிற்சிக்காக இரண்டு ஹெலிகொப்டர்கள் உள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாகவே மேலும் 04 ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் மிகப்பெரிய செலவினை அரசாங்கம் ஏன் செய்கிறது? மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், மக்களைப் பாதுகாப்பதாகவும் சொல்லிக்கொண்டவர்கள் இன்று அநாவசிய செலவினை செய்யப்போகின்றார்கள் என்பதையிட்டு புதுமையடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!