அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

?????????????????????????????????????????????????????????
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுளள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் உளநிலையையும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளைப் போன்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சில சிறைக்கைதிகள் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதுடன், ஏனையோருக்கு தொற்றுப்பரவக்கூடிய ஆபத்துக்களும் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போது அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையால் கைதிகள் உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கேனும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு அந்தக் கடிதத்தின் பிரதிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!