மூன்றாவது தொடர்பாளர் எவருக்கும் இதுவரை தொற்று இல்லை!

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தொற்றுக்குள்ளாகியவர்கள் மூலமாக, மூன்றாவது தொடர்பாளர் எவருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளும், புலனாய்வுப் பிரிவினரும் நடத்திய வரும் விசாரணைகளின் மூலம், இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கந்தகாடு புனர்வாழ்வு முகாமின் தொற்றாளர்கள் மூலமான முதலாவது, இரண்டாவது தொடர்பாளர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர் என்று கூறினார்.

எனவே இரண்டாவது அலை குறித்து தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் றோகண மேலும் குறிப்பிட்டார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமுக்கு வெளியே 20 தொற்றாளர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 16 பேர் ராஜாங்கனையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும், கந்தகாட்டில் இருந்து விடுமுறியல் சென்ற இராணுவ அதிகாரி ஒருவருடன் தொடர்புபட்டிருந்தனர் என்றும் கூறிய அவர், ஏனைய நால்வரும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோகண குறிப்பிட்டார்.

இதுவரை நாட்டில் 32 கொரோனா தொற்று கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் இவற்றில் வெலிசற கடற்படை முகாம் கொத்தணியே மிகப் பெரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!