கொரோனா தடுப்பூசி: முதற்கட்டமாக 375 பேரிடம் மருத்துவ பரிசோதனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மராட்டியமும், தமிழகமும் திகழ்கிறது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 38 ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.கோவேக்சின் பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, பரிசோதனையில் ஈடுபடுத்துவதற்கான ஆட்களை தயார் செய்யுமாறும் கடந்த 7ஆம் தேதி, 12 மருத்துவமனைகளுக்கும் ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், சென்னை எஸ்ஆர்எம் உள்ளிட்ட 12 மருத்துவமனைகளில் முதல் கட்ட பரிசோதனை நடைபெறுகிறது.

முதல் கட்ட பரிசோதனை 375 பேருடன் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் கட்ட பரிசோதனையில், தடுப்பூசியால் உடலில் ஏதேனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறதா என ஆய்வு செய்யப்படும். இந்த பரிசோதனையில் இடம்பெறுபவர்களில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும், சிலருக்கு தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத மருந்தும் கொடுக்கப்படும். யாருக்கு உண்மையான தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது, யாருக்கு கொடுக்கப்படவில்லை என்பது, மருந்தை கொடுப்பவருக்கோ, மருந்தை பெறுபவருக்கோ தெரியாது. இந்த விவரம் பரிசோதனை காலம் முடிவடைந்த பிறகே தெரியவரும்.

முதல் கட்டத்தில், எதிர்மறையான விளைவு ஏற்படுகிறதா என்பது மட்டுமே சோதிக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என்பது, இரண்டாவது கட்டத்தில் பரிசோதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பாரத் பயோடெக் உள்பட 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. முதல் மற்றும் 2 ஆம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் நிறுவனம் பாரத் பயோடெக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!