இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 543 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இறப்புவீதம் என்பது படிப்படியாக குறைந்து, இப்போது 2.5 சதவீதத்துக்கு கீழாக வந்துள்ளது. அதிலும் 29 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பலி எண்ணிக்கை, இந்திய சராசரியை விட குறைவாகவே உள்ளது. அவற்றில் 5 மாநிலங்களில் இறப்புவீதம் பூஜ்ஜியமாக உள்ளது. 14 மாநிலங்களில் இறப்புவீதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டு உத்திகள், தீவிரமான பரிசோதனைகள், தரமான மருத்துவ மேலாண்மை நெறிமுறைகள் எல்லாம் இணைந்துதான் இந்தியாவில் இறப்புவீதத்தை குறைவாக வைத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் கூறுகையில், “இந்தியாவில் இறப்புவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது இறப்புவீதம் 2.49 சதவீதமாக இருக்கிறது. உலகின் மிகக்குறைந்த இறப்புவீதங்களில் இதுவும் ஒன்று. ஒரு மாதத்துக்கு முன்பு இறப்புவீதம் 2.82 சதவீதமாக இருந்தது. கடந்த 10-ந் தேதி இது 2.72 சதவீதமாக குறைந்தது. தற்போது அது 2.49 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது” என தெரிவிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கூறும்போது, “29 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்திய சராசரியை விட குறைவான இறப்புவீதத்தை கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு காரணம், பொது சுகாதார அமைப்பின் பாராட்டத்தக்க பணிகள்தான்” என தெரிவிக்கிறது. இந்தியாவில் மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம், மிசோரம், அந்தமான் நிகோபார் ஆகியவற்றில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவில்லை. இதனால் இந்த மாநிலத்தின் இறப்புவீதம் பூஜ்ஜியமாக உள்ளது.

கொரோனா இறப்புவீதம், தேசிய சராசரியை விட குறைவாக உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் திரிபுரா (0.19), அசாம் (0.23). கேரளா (0.34), ஒடிசா (0.51), கோவா (0.60), இமாசலபிரதேசம் (0.75), பீகார் (0.83), தெலுங்கானா (0..93), ஆந்திரா (1.31), தமிழகம் (1.45), சண்டிகார் (1.71), ராஜஸ்தான் (1.94), கர்நாடகம் (2.08), உத்தரபிரதேசம் (2.36 சதவீதம்) இடம் பிடித்துள்ளன. தற்போது நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 379 ஆக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!