இந்திய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுத்தவர் சாரா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களை நீர்கொழும்பு தேவாலய தாக்குதல்தாரியின் மனைவியான சாரா ஜெஸ்மினே இந்திய புலனாய்வுத்துறைக்கு வழங்கியிருக்கலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த அரச புலனாய்வுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இந்திய புலனாய்வுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் அந்த புலனாய்வுத்துறைக்கு சஹ்ரானின் தரப்பில் உள்ளவர்களிடம் இருந்தே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சாரா ஜெஸ்மின் கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டபோதும் அவர் கடந்த செப்டெம்பரில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக சாட்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஏப்ரல் 26ஆம் திகதிக்கு பின்னர் சாராவை பார்த்தவர்கள் குறித்து 2019 மே மாத இறுதிப்பகுதியில் தாம் அரச புலனாய்வு தலைமையகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியதாகவும், இது பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டமை தமக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவியும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் இந்திய புலனாய்வு அமைப்பு தனது முகவரை பாதுகாப்பாக பிரித்தெடுத்திருக்குமா? என்றும் சாட்சியிடம் கேட்கப்பட்டது.

அவர்கள் ஒரு பயங்கரவாதக் களத்தில் ஒரு முகவரை ஈடுபடுத்தியிருந்தால் அவரை பாதுகாப்பாக பிரித்தெடுக்கும் திட்டமும் அவர்களிடம் இருக்கும் என்று சாட்சி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!