பேரம் பேசும் சக்தி எம்மிடமே உள்ளது – இவ்வாறு சொல்கிறார் ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம். அபிவிருத்திகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியும் எம்மிடமே இருக்கின்றது.

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று (02) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எங்கு பிரசாரக் கூட்டங்களை நடத்தினாலும் மக்கள் திரண்டுவந்து பேராதரவை வழங்குகின்றனர். எமக்கான ஆதரவு நாளுக்குநாள் பெருகியதை அண்மைக் காலங்களில் கண்டோம். இன்று பேராதரவு கிட்டியுள்ளது. மலையகத்தின் தாய்க் கட்சியான காங்கிரஸின் பின்னால்தான் நாம் நிற்போம் என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம். அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றேன். இலக்கை அடைவதற்கான வயதும் எனக்கு இருக்கின்றது. எனவே, அதிகாரத்தை வழங்கி எனது கரங்களைப் பலப்படுத்தி மாற்றத்துக்கான பயணத்தில் நீங்களும் இணைய வேண்டும்.

இன்னும் 10 ஆண்டுகளில் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என நாம் யோசிக்கின்றோம். அதற்கான திட்டங்களை அடுத்துவரும் காலப்பகுதியில் அமைப்போம்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!