கோவிட்-19: தமிழகத்தில் ஒரே நாளில் 5,875 பேர் பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 875 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 613ஆகப் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் அதிகபட்சமாக 98 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் நான்காயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளன.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து ஆயிரத்து 942 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மொத்தமாக நான்காயிரத்து 810 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகபட்சமாக ஐயாயிரத்து 517 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 483ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்தும் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, இன்று 58 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 26 இலட்சத்து 77 ஆயிரத்து 17ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!