கனேடிய அமெரிக்க தம்பதியின் திருமணத்தை ஏற்க மறுக்கும் கனேடிய நிர்வாகம்!

கனேடிய அமெரிக்க தம்பதி ஒன்று வீடியோ அழைப்பில் செய்து கொண்ட திருமணத்தை சட்டப்படி ஒப்புக்கொள்ள முடியாது என கனேடிய நிர்வாகம் மறுத்துள்ளது. கனடாவின் வின்ட்சர் பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரன் பிக்ரெல் மற்றும் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மார்க் மக்ஸிமியுக்(32) என்பவர்களின் திருமணமே கனேடிய அதிகாரிகளால் தற்போது ஒப்புக்கொள்ள முடியாது என மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து பயணக்கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே, இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளது.

இதனிடையே, திருமணம் செய்து கொண்டால் தம்மால் கனடாவுக்கு வந்து தமது துணையை சந்திக்க முடியும் என முடிவு செய்த மக்ஸிமியுக் கன்சாஸ் மாகாண சட்டத்திற்கு உட்பட்டு வீடியோ அழைப்பில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி ஜூலை 6 ஆம் திகதி பிக்ரெல் மற்றும் மக்ஸிமியுக் ஜோடி வீடியோ அழைப்பில் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளது.

மட்டுமின்றி, அந்த திருமணத்திற்கான ஆவணம் ஒன்றையும் மாகாண நிர்வாகத்திடம் இருங்து பெற்றுள்ளார் மக்ஸிமியுக். ஆனால், கனேடிய எல்லையில் குறித்த ஆவணம் மட்டுமல்ல, அந்த திருமணமே செல்லாது என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பிக்ரெல் மற்றும் மக்ஸிமியுக் ஜோடியை உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் proxy marriage என அறியப்படும் இதுபோன்ற திருமணம் செல்லுபடியாகும் என்பதால், அவர் அந்த ஆவணங்களுடன் கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.

கொரோனாவால் இரு நாட்டு எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. ஆனால் கனேடியர்களுக்கு விமானத்தில் அமெரிக்கா செல்லலாம். இருப்பினும் அலுவலக நெருக்கடிக்கு இடையே, தம்மால் அமெரிக்கா சென்று அங்கே இரண்டு வார காலம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதும் தற்போதைய சூழலில் முடியாத விடயம் என்கிறார் பிக்ரெல்.

proxy marriage என்பதாலையே மக்ஸிமியுக் கனடாவுக்குள் நுழைய முடியாமல் போனதால், இருவரும் கன்சாஸ் மாகாணத்தில் மறுபடியும் ஒன்றாக திருமணம் செய்து கொண்டால், அது முறைப்படி செல்லுபடியாகும் என சட்ட ஆலோசனை பெற்றுள்ளனர். அதற்கான உரிய கால அவகாசம் கிடைக்கும் வரை தற்போது காத்திருப்பதாக பிக்ரெல் மற்றும் மக்ஸிமியுக் ஜோடி தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!