கொரோனாவை கையாள்வதில் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்கர்கள் கருத்து!

அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்கர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு மட்டும், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கையும் 2 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டிரம்ப், தீவிரமாக செயல்படவில்லை என்றும், அதனால் தான் பாதிப்பு அதிகரித்தது என்றும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தை டிரம்ப் கையாளும் விதம் குறித்து அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளும் விதத்தை ஏற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 29, 30 ஆகிய 2 தினங்களில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 730 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.. அவர்களில் 66 சதவீதம் பேர் ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியை சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!