தமிழகத்தில் கொல்லப்பட்ட இலங்கை தாதா: வெளியான அதிர்ச்சி பின்னணி!

தமிழகத்தில் இலங்கை தாதாவின் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவரை காதலியே பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார். இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர்.

சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

லொக்கா தனது காதலி அமானி தான்ஜியுடன் கோவை தங்கியிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அமானி, சிவகாமசுந்தரி, மற்றும் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் லொக்கா தங்கி இருந்த வீடு அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞருக்கு சொந்தமானது என்றும் தியானேசுவரன் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. துபாயில் 3 வருடத்திற்கு முன்பு அமானி தான்ஜியை சந்தித்த லொக்க, அவள் மீதுள்ள ஆசையில் அவளது காதலனை கொலை செய்துவிட்டு, அமானி தான்ஜியை அபகரித்துக் கொண்டதாகவும், அதற்கு பழிக்கு பழியாக அமானி தான்ஜி லொக்காவுடன் பழகி இந்த கொலை சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது .

லொக்கா இந்தியாவிற்குள் வந்தது எப்படி? அவருக்கு உதவிய நபர்கள் யார்? கையூட்டு பெற்றுக் கொண்டு போலி ஆவணத்தை சரி பார்க்க தவறியவர்கள் யார்? என அனைவரிடமும் விரிவான விசாரணை நடத்த 7 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிழல் உலக தாதாவாக கருதப்படும் அங்கட லொக்கா மீது குறுகிய காலத்தில் போதை பொருள் கடத்தல், கள்ளதுப்பாக்கி விற்பனை,வாள்வெட்டுக் கூலிப்படை அட்டகாசம், அயல் நாட்டு கள்ள நோட்டு பறிமாற்றம், பெண்கள் கடத்தல், பலாத்கார வழக்கு என 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால், 2014 ஆம் ஆண்டு கடுமையான நெருக்கடியால் இலங்கையில் இருந்து விரட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

கள்ளத்தோணி மூலம் தமிழகத்திற்குள் நுழைந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் கூட்டாளிகளுடன் துபாய்க்கு தப்பிச்சென்று அங்கிருந்த படியே கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்துள்ளார் அங்கட லொக்கா. 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் துபாயில் ஏற்பட்ட நெருக்கடியால் கோவைக்கு பிரதீப் சிங் என்ற போலியான பாஸ்போர்ட்டில் தனது காதலியான அமானி தான்ஜியுடன் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக கூறப்படுகின்றது. அதே போல பெரிய அளவிலான கழுகுகளை போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளான் அங்கட லொக்கா என கூறும் காவல்துறையினர்.

ஒரு முறை கொழும்பு சிறைக்குள் இருக்கும் தனது கூட்டாளிக்காக கால் கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளையும், இரு செல்போன்களையும் ஜிபிஎஸ் பொருத்தி கருப்பு டேப்பால் கழுகின் கால்களில் சுற்றி அனுப்பிய போது பொலிசாரிடம் கழுகு சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. லொக்கா மரணத்தின் பின்னணியும், அவருடைய தமிழக கூட்டாளி யார் என்பதும் சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணையில் விரைவில் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!