இந்தியை திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை!

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா வெளியேறக்கூறி அவமதித்ததற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மரபுவழி மருத்துவமுறைகளுக்கான மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில், இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா வெளியேறக்கூறி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், பல தேசிய மொழிகள் இருக்க வேண்டும். அம்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் பணிகளிலுள்ள அலுவலர்கள் தொடர்ந்து இந்தி மொழிவெறியோடு நடந்துகொள்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அட்டவணையிலுள்ள அத்தனை மொழிகளையும் தேசிய மொழியாகவும் அலுவல் மொழியாகவும் மத்திய அரசு அறிவித்திட உரிய சட்டப் போராட்டங்களையும் அரசியல் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.

இந்தித் திணிப்பினை ஏற்காத மாநில முதல்வர்களைச் சந்தித்து மாநிலங்களின் மொழியுரிமைக் கூட்டமைப்பை உருவாக்கி மத்திய அரசின் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறி இந்தி திணிக்க முற்படுமானால் தமிழகமெங்கும் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என சீமான தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!