கோவிட்-19: ஒரே நாளில் 69 ஆயிரத்து 239 பேர் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது!

சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, 8 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால்பதித்து தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி உலகமெங்கும் 2.34 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு 8 லட்சத்து 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58.47 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.80 லட்சமாகவும் உள்ளது. அடுத்த நிலையில் உள்ள பிரேசிலில் 35.83 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 1.14 லட்சம் பேர் அதற்கு இரையாகி உள்ளனர்.

பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இந்தியா தொடருகிறது. இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் புதிதாக 69 ஆயிரத்து 239 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் 8 லட்சத்து ஆயிரத்து 147 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 44 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையை பாதிப்பு எட்டுவதற்கு 110 நாட்கள் ஆகின. அதில் இருந்து 59 நாளில் 10 லட்சத்தை பாதிப்பு கடந்தது. 10 லட்சத்தில் இருந்து 20 லட்சத்தை கடப்பதற்கு 21 நாட்கள் எடுத்துக்கொண்டன. ஆனால் 20 லட்சத்தில் இருந்து 30 லட்சம் என்ற எண்ணிக்கையை கடக்க 16 நாட்களே ஆகி உள்ளன. இது கொரோனா பரவல், கிடுகிடுவென வேகம் காட்டுவதையே உணர்த்துகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு நேற்று முன்தினம் 945 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 912 ஆகி உள்ளது. இறப்பு விகிதம் என்பது 1.86 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று பலியான 912 பேரில், மராட்டிய மாநிலத்தினர் 297 பேர் அடங்குவர். அதற்கு அடுத்த அளவு உயிரிழப்பை ஆந்திரா (97) சந்தித்துள்ளது. கர்நாடகத்தில் 93 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதற்கு அடுத்த நிலையில் உயிரிழப்பு நேரிட்டது.

உத்தரபிரதேசத்தில் 70, மேற்கு வங்காளத்தில் 48, பஞ்சாப்பில் 45, மத்திய பிரதேசத்தில் 21, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 15, குஜராத்திலும், டெல்லியிலும் தலா 14, அரியானாவில் 12, ராஜஸ்தான், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகிவற்றில் தலா 11 பேர் பலியாகி இருக்கிறார்கள். 10-க்கும் கீழே இறப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக சத்தீஷ்கார், ஒடிசா, புதுச்சேரி, அசாம், பீகார், கோவா, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், லடாக், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகியவை உள்ளன.

இதுவரை பலியான 56 ஆயிரத்து 706 பேரில், கூடுதல் உயிர்ப்பலியை கொண்டு (21 ஆயிரத்து 995) மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் (6,420) இருக்கிறது. மூன்றாம் இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 4,614 பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள்.

தொடர்ந்து டெல்லியில் 4,284 பேரும், ஆந்திராவில் 3,189 பேரும், குஜராத்தில் 2,881 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,867 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,737 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,206 பேரும், பஞ்சாப்பில் 1,036 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

1000-க்கும் குறைவாக உயிரிழப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக ராஜஸ்தான் (944), தெலுங்கானா (755), ஜம்மு காஷ்மீர் (608), அரியானா (597), பீகார் (503), ஒடிசா (399), ஜார்கண்ட் (308), அசாம் (234), கேரளா (218), உத்தரகாண்ட் (195), சத்தீஷ்கார் (189), புதுச்சேரி (151), கோவா (140) ஆகியவை உள்ளன.

100-க்கும் கீழே கொரோனா உயிரிழப்புகளை சந்தித்துள்ள மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக திரிபுரா, சண்டிகார், அந்தமான் நிகோபார், இமாசலபிரதேசம், மணிப்பூர், லடாக், நாகலாந்து, மேகாலயா, அருணாசலபிரதேசம், சிக்கிம், தத்ராநகர் ஹவேலி தாமன் தியு ஆகியவை இருக்கின்றன. இந்த உயிரிழப்புகளில் 70 சதவீதத்துக்கும் மேலானவை, பிற நாள் பட்ட நோய்களுடன் அவதியுற்றுவர்களுக்கு கொரோனாவும் வந்து தாக்கியதால் நேரிட்டவை என மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!