பொறுப்புணர்வுடன் செயற்பட ஒத்துழையுங்கள் – யாழ் பல்கலை துணைவேந்தர்

பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என்று புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (28) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

“எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறார்கள். 11 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழுவாகும். இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்தப் பல்கலைக்கழகம் எமது மக்களுடைய ஒரு சொத்தாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப் பெரியது. கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது. கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில் இந்த பல்கலைக்கழகம். இராமநாதனால் வழங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று பல்கலைக்கழகமாக மிளிர்ந்திருக்கின்றது.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!