கோவிட்-19: ஒரேநாளில் அதிகபட்சமாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உலகளவில் நேற்றைய நிலவரப்படி 2.43 கோடியாக உள்ளது. உயிரிழப்பு என்பது 8.30 லட்சமாக இருக்கிறது. மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிற அமெரிக்காவில் 60.04 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அங்கு உயிரிழப்பு 1.83 லட்சத்தை தாண்டி இருக்கிறது. இரண்டாவது மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற பிரேசிலில் 37.22 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இறப்பு 1.17 லட்சத்தை கடந்துள்ளது.

மூன்றாவது மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக இந்தியா தொடருகிறது. இந்தியாவை தொடர்ந்து ரஷியா, தென் ஆப்பிரிக்கா, பெரு, மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகள் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்தியாவில் நேற்று தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 75 ஆயிரத்து 760 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 7 லட்சத்து 18 ஆயிரத்து 711 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆந்திரா (3.82 லட்சம்) இருக்கிறது. நேற்று முன்தினம் 9 லட்சத்து 24 ஆயிரத்து 998 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பும் அதிகரித்து இருக்கிறது என்பது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 கோடியே 85 லட்சத்து 76 ஆயிரத்து 510 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 1,550 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பலி, நேற்று முன்தினத்துடன் (1,059) ஒப்பிடுகையில் நேற்று சற்றே குறைந்து 1,023 ஆகி இருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 295 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் கூடுதல் இறப்பை கர்நாடகம் (133) சந்தித்து இருக்கிறது. கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பை தமிழகம் சந்தித்தது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்களாக உள்ள மராட்டியத்தில் 23 ஆயிரத்து 89 பேரும், கர்நாடகத்தில் 5,091 பேரும், டெல்லியில் 4,347 பேரும் இறந்துள்ளனர். கொரோனாவால் ஏற்படும் இறப்புவிகிதம், 1.83 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

இந்தியாவில் பாதிப்பு அதிகரிப்பதுபோலவே குணம் அடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 56 ஆயிரத்து 13 பேர் கொரோனாவை வெற்றிகரமாக ஜெயித்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். அதிகபட்சமாக ஆந்திராவில் 8,473 பேர், மராட்டியத்தில் 7,637 பேர், கர்நாடகத்தில் 7,249 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 23 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதம், 76.24 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. தற்போது நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்து 991 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 21.93 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!