ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரியா!

தென் கொரியாவின் அரசியல் நிபுணர்கள் பலர், வடகொரிய தலைவர் ஆழ்ந்த கோமாவில் இருப்பதாக தகவல் வெளியிட்ட நிலையில், வெள்ளிக்கிழமை ஒற்றைப் புகைப்படத்தால் உண்மையை உறுதி செய்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் முக்கிய பிராந்தியங்களில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக மழையும் பலத்த காற்றும் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதனிடையே பவி சூறாவளியும் புரட்டியெடுக்க, பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த நிலையிலேயே, கிம் ஜாங் உன் பாதிப்புக்கு உள்ளான விவசாய நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி உள்ளார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் வடகொரியாவில் கட்டுக்குள் இருப்பதாக அறிவித்திருந்த கிம் ஜாங் விவசாயிகளுடன் மாஸ்க் ஏதும் அணியாமலே உரையாடுகிறார்.

மட்டுமின்றி, நோயாளி போல் இல்லாமல் சுறுசுறுப்பாகவே கிம் ஜாங் காணப்படுகிறார். சுமார் 10 நாட்களுக்கு முன்னரே, தென் கொரிய உளவு அமைப்பு, கிம் ஜாங் ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார் எனவும், ஆட்சி அதிகாரங்களை தமது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியிட்டது.

மட்டுமின்றி சமீப நாட்களில் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை வடகொரியா சார்பில் வகுப்பது கிம் யோ எனவும் தகவல் வெளியானது. ஆனால், ஆட்சி அதிகாரங்களை சகோதரியுடன் பகிர்ந்து கொண்டதன் நோக்கம் நோய் காரணம் அல்ல எனவும் வேலை தொடர்பான மன அழுத்தம் குறைப்பதற்காகவே என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!