அயோத்தியில் உருவாகவிருக்கும் விமான நிலையத்திற்கு கடவுள் ராமர் பெயரை சூட்ட முடிவு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ராமரின் பெயரை வைக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில் விமான நிலையம் அமைக்க டிசம்பர் 2021 வரை உத்தரபிரதேச அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

மேலும், “ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, அயோத்தியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் ஒரு பெரிய சுற்றுலாப் போக்குவரத்து உருவாகும் என்று உத்தரபிரதேச அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. விமான நிலையத்தில் மேலும் பல உலகத்தர வசதிகள் செய்யப்படும்” என்று அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், அயோத்தி விமான நிலையத்திற்கு கடவுள் ராமரின் பெயரை வைக்கவும் சர்வதேச அந்தஸ்து வழங்கவும் மாநில அரசு முடிவெடுத்திருப்பதாகவும் இதுதொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் உத்திரப்பிரதேச அரசு விரைவில் சமர்ப்பிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்குவதற்கான திட்டம் விரைவில் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய கட்டுமானத்திற்காக 525 கோடி ரூபாய் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளதுடன், ஏற்கனவே 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அதிக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று உத்தரபிரதேச சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நந்த் கோபால் நந்தி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!